என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் 1,099 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு, 48 பேரின் மனுக்கள் தள்ளுபடி
வேலூர் மாவட்டத்தில் 1,099 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்க்கப்பட்டு 48 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 1,099 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 48 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. என தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது.
வேலூர் மாவட்டத்தில் 180 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு 505 பேரும், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 234 பேரும், பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 105 பேரும்,
ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 72 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 79 பேரும், திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 63 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு 89 பேரும் என மொத்தம் 1,147 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வையில் வார்டு வாரியாக ஒவ்வொரு மனுவாக பரிசீலனை செய்யப்பட்டன.
வேட்பாளர் மற்றும் அவருடன் ஒருவர் மட்டும் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். உரிய தகவல் தெரிவிக்காதது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சில இடங்களில் அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் வேட்புமனுக்களும் தள்ளுபடியானது.
வேலூர் மாநகராட்சியில் 33, குடியாத்தம் நகராட்சியில் 8, பேரணாம்பட்டு நகராட்சியில் 1, ஒடுகத்தூரில் 3, பென்னாத்தூரில் 1, பள்ளிகொண்டாவில் 2 மனுக்கள் என மொத்தம் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருவலம் பேரூராட்சியில் மனு எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை. வேலூர் மாவட்டத்தில் 1,099 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி 8-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் சுனில்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று காட்பாடியில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. அப்போது அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட 5 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து சுனில்குமார் போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






