என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறக்கும் படை சோதனை
    X
    பறக்கும் படை சோதனை

    சேலத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய 570 சேலைகள்

    சேலம் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட 570 சேலைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரேவதியிடம் ஒப்படைத்தனர்.
    சங்ககிரி:

    தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரங்கராஜன் தலைமையில், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 10க்கும் மேற்பட்ட பண்டல்களில் 570 சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சரக்கு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் இருந்து, சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சேலைகள் கொண்டு செல்லப்பட்டதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிந்தது.

    இதையடுத்து பறக்கும் படையினர் 570 சேலைகளை அதிரடியாக பறிமுதல் செய்து, பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். இதனிடையே சேலைகளின் உரிமையாளரான குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்த தறிப்பட்டறை அதிபர் பழனிசாமி தேவூர் பேரூராட்சிக்கு வந்தார். அவர் சேலைகளுக்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்தார். இதையடுத்து சேலைகள் பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டன.

    Next Story
    ×