என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மத்திய பட்ஜெட்: புதுவைக்கு கூடுதல் நிதி ஒதுக்காதது வேதனை அளிக்கிறது- கென்னடி எம்.எல்.ஏ. அறிக்கை
மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு கூடுதல் நிதி ஒதுக்காதது வேதனை அளிப்பதாக கென்னடி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மந்திரி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதுவை மாநிலத்திற்கு என்று எந்த ஒரு திட்டங்களும் சிறப்பு சலுகைகளும் இடம் பெறவில்லை. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மத்திய அரசின் நிதி உதவி அளிப்பு ரூ.1729 கோடிதான் உள்ளது.
சட்டசபை தேர்தலின் போது, மத்திய அரசோடு ஒத்துப்போகவில்லை என்றால் மாநில வளர்ச்சி அடையாது, புதிய தொழில் கூடங்கள் வராது. மூடிய தொழிற்கூடங்களை திறக்க இயலாது, அரசு நிறுவனங்களை லாபகரமாக மீட்டெடுக்க முடியாது என்றெல்லாம் பொய் பிரசாரத்தின் மூலம் இந்த பா.ஜனதா கூட்டணி ஆட்சியினை கட்டமைத்தது.
மத்திய அரசோடு இணக்கமாக இருந்து வரும் இந்த ஆட்சி எதிர்பார்த்தபடி- வாக்குறுதி அளித்தபடி எந்த முன்னேற்ற வளர்ச்சிக்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி மத்திய பட்ஜெட் தயாரிப்பின் போது புதுவை மாநிலத்தின் சார்பிலும் முதல்-அமைச்சர் சார்பிலும், அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள- மாற்றம் வரும்காலத்தில் ஏற்படப்போகும் இழப்பினை சமாளிக்க ரூ. ஆயிரத்து 710 கோடி தேவை என வைத்த கோரிக்கையின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
2022-ம்ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை நிறுத்தப்பட்டு விடும். அதனால் மாநில அரசு மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும். இதுகுறித்து மாநில அரசு என்ன அழுத்தம் கொடுத்து இருக்கிறது? ஜி.எஸ்.டி. இழப்பீட்டு வருவாயை எப்படி ஈடுகட்ட போகிறது?
2022--2023 நிதியாண்டில் ரூபாய் 1300 முதல் 1500 கோடி வரை நிதிப்பற்றாக்குறை ஏற்படும் சூழலுக்கு இந்த அரசு தள்ளப்பட்டிருக்கிறது. வரும் ஒவ்வொரு நிதி ஆண்டும் இதே நிலைமைதான் புதுவை மாநிலத்திற்கு ஏற்படப் போகின்றது.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
Next Story






