search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் ரமணசரஸ்வதி திறந்து வைத்த போது எடுத்த படம்.
    X
    சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் ரமணசரஸ்வதி திறந்து வைத்த போது எடுத்த படம்.

    பாசனத்திற்காக அரியலூர் சித்தமல்லி நீர்தேக்கம் திறப்பு

    அரியலூர் சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு கலெக்டர் தண்ணீரிரை திறந்து வைத்தார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கார்குடி கிராமத்தில் உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீரினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, இன்று (28.01.2022) திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது :-
    தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து நன்செய் மற்றும் புன்செய் ஆயக்கட்டு நிலங்களுக்கு இன்று (28.1.22) தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    சித்தமல்லி நீர்த்தேக்கமானது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் , கார்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இது  1981-ல் ஆரம்பிக்கப்பட்டு, 1988ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தின் கரையின் மொத்த நீளம் 5050 மீட்டர். இந்த அணையின் முழு கொள்ளளவு உயரம் 4.75 மீட்டர். மொத்தக் கொள்ளவு 226.80 மில்லியன் கனஅடி ஆகும்.

    இதில் 3 தலைமதகுகள் உள்ளன. தலைமதகு எண்.1 மூலம் கார்குடி தெற்க்கேரிக்கும், தலைமதகு எண்.2 மூலம் கோவத்தடை ஏரிக்கும் மற்றும் மெயின் வாய்க்காலுக்கும், தலைமதகு எண்.3 மூலம் திருப்புரந்தான் பெரிய ஏரிக்கும் மற்றும் திருப்புந்தான் வாய்க்காலுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பாசன வசதி பெறுகிறது.

    சித்தமல்லி நீர்த்தேக்கத்தின் மூலம் நன்செய் நிலம் 1179.02 ஏக்கரும், புன்செய் நிலம் 3901.60 ஏக்கர் நிலமும் மொத்தம் 5080.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் மூலம் நடுவலூர் (கிழக்கு), இருகையூர், காரைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி, திருபுரந்தான், இடங்கண்ணி, சோழமாதேவி ஆகிய கிராமங்கள் பயன் பெறுகின்றன.

    நீர்தேக்கத்திலிருந்து உபரிநீரை வெளியேற்ற ஒரு உபரிநீர்ப்போக்கியும் மற்றும் ஒரு உபரிநீர் வழிந்தோடியும் உள்ளது. இந்த உபரிநீரானது சித்தமல்லி ஓடை வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. 2017, 2019ம் ஆண்டு அரசாணை பெறப்பட்டு, தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது.

    கடந்த 04.01.2022 அன்று அணையின் கொள்ளளவு இருப்பான 207.911 மில்லியன் கனஅடியை கணக்கில் கொண்டு கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு அதற்கான அரசாணை பெறப்பட்டு முதல்வரின் ஆணையின்படி சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து நன்செய் மற்றும் புன்செய் ஆயக்கட்டு நிலங்களுக்கு 28.01.2022 முதல் 21.03.2022 வரை முறை வைத்து 52 தினங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர்சாந்தி, உதவிப்பொறியாளர் ராஜாசிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×