என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைக்கு ஒழுகும் நூலக கட்டிடம்
    X
    மழைக்கு ஒழுகும் நூலக கட்டிடம்

    கள்ளக்குறிச்சி அருகே மழைக்கு ஒழுகும் நூலக கட்டிடம்

    புத்தகங்களை அலமாரிகளில் அடுக்காமல் கீழே மொத்தமாக அடுக்கி வைத்திருப்பதால் வாசகர்கள் புத்தகங்களை தேடி எடுத்து படிக்க இயலாத சூழ்நிலை உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் சையது குளம் அருகில் 1995- ம் ஆண்டு கட்டப்பட்ட கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. மேலும் ரூ.1000 செலுத்தி 60-க்கும் மேற்பட்டோர் புரவலர்களாக உள்ளனர்.

    தினமும் சுமார் 30-க்கும் மேற்பட்ட வாசகர்கள் செய்தித் தாள்கள், வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் உள்ளிட்டவை படிப்பதற்காக வந்து செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சந்தா செலுத்தி நூலகத்தில் உள்ள பல்வேறு புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து வருகின்றனர்.

    இந்த நூலக கட்டிடத்தில் வாசகர்கள் வந்து அமர்ந்து படிப்பதற்கு கூட இட வசதியின்றி புத்தகங்கள் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    புத்தகங்களை அலமாரிகளில் அடுக்காமல் கீழே மொத்தமாக அடுக்கி வைத்திருப்பதால் வாசகர்கள் புத்தகங்களை தேடி எடுத்து படிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இவ்வாறு போட்டித் தேர்வு புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள் ஆகியவற்றை வாசகர்கள் படிக்காமலே வீணாகும் அவல நிலையும் உள்ளது.

    மேலும் கட்டிடங்கள் பலவீனம் அடைந்துள்ளதால் மழைபெய்தால் மழைநீர் கான்கிரீட் சுவற்றின் கீழ்ப்பக்கம் கசிந்து புத்தகங்கள் மீது விழுகின்றன. இதனால் புத்தகங்கள் மழை நீரில் நனைந்து வீணாகும் அவலநிலை உள்ளது.

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாசகர்கள் கூறுகின்றனர். எனவே நூலகங்களை திறந்து வைத்து விட்டு புத்தகங்களை அனுப்பி விட்டால் மட்டும் போதும் என நினைக்கும் அதிகாரிகள், அவற்றை முறையாக பாதுகாக்க கட்டிட வசதிகளையும், வாசகர்கள் அமர்ந்து படிக்க இடவசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தியாகதுருகம் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×