search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளையர்கள் தீ வைத்ததில் வீட்டின் ஜன்னல் திரை எரிவதை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளையர்கள் தீ வைத்ததில் வீட்டின் ஜன்னல் திரை எரிவதை படத்தில் காணலாம்.

    வீடு புகுந்து 20 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் திருட்டு- தடயங்களை மறைக்க வீட்டுக்கு தீ வைத்து சென்ற கொள்ளையர்கள்

    மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும், தாங்கள் வந்த தடயங்களை மறைப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்து எரித்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியில் கணேசன் என்பவர் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் நிலையில், மனைவி நித்யா மற்றும் குடும்பத்தினர் மட்டும் இங்கு வசித்து வந்தனர்.

    கடந்த 22-ந் தேதி நித்யா மற்றும் குடும்பத்தினர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனால் அவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப்துறையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயமூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே துக்க வீட்டுக்கு சென்ற நித்யா உள்ளிட்ட குடும்பத்தினர் தகவல் அறிந்து வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டை பார்த்து கதறி அழுதனர்.

    வீடு முழுவதும் தீ பரவியதால் வீட்டுக்குள் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதனால் யாரோ மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும், தாங்கள் வந்த தடயங்களை மறைப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்து எரித்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடம் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

    தேவகோட்டை ராம்நகர் பகுதியானது வளர்ந்து வரும் பகுதியாகும். நீதிமன்றங்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் இந்தப்பகுதியில் உள்ளன. இதனால் தேவகோட்டையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு அதிக அளவில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வரு கின்றனர். இங்கு கொள்ளை சம்பவம் மற்றும் தீ விபத்து நடைபெற்றிருப்பது அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×