search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடக்கம் விவசாயிகளுக்கு இழப்பீடு நிர்ணயம்

    வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் சமையல் கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பகட்டத்தில் பெரிய நகரங்களில் இத்திட்டத்தை ஆயில் நிறுவனம் செயல்படுத்தியது. தொடர்ந்து தமிழகம், புதுவையில்  குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்னை எண்ணூரிலிருந்து புதுவை வழியாக நாகைப் பட்டினத்துக்கு 320 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது. 

    இதில் புதுவை மாநிலத்தில் 6 கி.மீ. தூரத்துக்கு கிளை எரியாயு குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.புதுவை கிளை எரிவாயு இணைப்பு திட்டம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இ.மண்டகப்பட்டு- வழுதாவூர்,  துத்திப்பட்டு, கரசூர்,- கடப்பேரிகுப்பம்,- பூத்துறை வழியாக புதுவை மேட்டுப்பாளையத்துக்கு நுழைகிறது.  இங்கு எரிவாயு பகிர்மான முனையம் அமைக்கப்படுகிறது. 

    அங்கிருந்து புதுவை பகுதிக்கு குழாய்கள் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

    புதுவையில் குழாய் பதிக்கப்பட உள்ள அளவுக்கு ஏற்ப நில உரிமை யாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். இந்த இழப்பீடு தொகையை புதுவை வருவாய்த்துறை இப்போது நிர்ணயித்துள்ளது.

    இதன்படி கியாஸ் குழாய் பதிக்கப்பட உள்ள நிலத்தின் சொத்து வழிகாட்டி மதிப்பை 10 மடங்காக்கி அதில் 10 சதவீதம் நில பயனாளர் தொகையாக உரிமையாளர்களுக்கு வழங் கப்படும். மேலும் விவசாய சேதத்துக்கும் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    விவசாய பயிர்கள், பூக்கள், தோட்டக்கலை பயிர்களுக்கு சதுர மீட்டருக்கும், மர பயிர்களுக்கு ஆண்டு வளர்ச்சியை கணக்கில் கொண்டும் இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனை மரத்துக்கு மட்டும் உயரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    விவசாய பயிர்களை பொறுத்த வரை நெல்லுக்கு சதுரமீட்டருக்கு ரூ.84, சோளம் ரூ.73, தினை ரூ.84, கரும்பு ரூ.76, எண்ணெய் வித்து ரூ.108, பருத்திக்கு ரூ.66 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    தோட்டக்கலை பயிரில் வாழை சதுர மீட்டருக்கு ரூ.178, காய்கறி ரூ.190, மரவள்ளிக் கிழங்கு ரூ.189, மஞ்சள் ரூ.427, பூக்களில் ஜாதிமல்லி ரூ.135, குண்டுமல்லி ரூ.201, முல்லை ரூ.113, கனகாம்பரம் ரூ.26, சம்பங்கி ரூ.90, ரோஜா ரூ.250, காக்காட்டான் ரூ.100 இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இழப்பீட்டு தொகையை மாநில அரசின் உதவியுடன் கணக்கிட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பின் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் விரைவுபடுத்தப்படும்.
    Next Story
    ×