search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூஸ்டர் தடுப்பூசி
    X
    பூஸ்டர் தடுப்பூசி

    பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தீவிரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. 

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறையின் சார்பில் முகாமிட்டு காய்ச்சல் அறிகுறி உள்ளிட்டவைகள் தென்படுபவர்களை பரி சோதித்து சிகிச்சை அளித்து வருகிறோம்.  தொற்றை கண்டறிந்து தடுக்கும் வகையில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 3 ஆயிரத்து 300 பேர் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி இதுவரை போலீசார், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் என 1,300 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கு போடப்பட உள்ளது. 

    3-வது அலை வேகமாக பரவி வருவதால் 2 தவணை போட்டுக் கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள கூடுதல் எதிர்ப்பு சக்தி உடலில் கிடைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

    மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதல் இதுவரை 689 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 535 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 37 பேர் ஆஸ்பத்திரியிலும், 489 பேர் வீடுகளில் தனிப்படுத்தியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×