என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுவை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்- ரங்கசாமி வலியுறுத்தல்
புதுவை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை மந்திரி நிதின் கட்காரி தலைமையில் தென்மண்டல கதி சக்தி மாநாடு வீடியோ கான்பரன்சிங்கில் நடந்தது.முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை சாலை சந்திப்புகளை மேம்படுத்த ரூ.450 கோடிக்கு அனுமதி அளித்த மத்திய மந்திரிக்கு நன்றி. இத்திட்டம் நெரிசலை குறைப்பதோடு, காத்திருக்கும் நேரத்தையும் குறைக்கும். புதுவையில் விமான நிலைய வசதிகளை விரிவு படுத்த மத்திய மந்திரி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கூடுதலாக ஆயிரத்து 828 மீட்டர் ஓடுபாதை தேவை.
விமான நிலைய மேம்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய 3 ஆயிரத்து 330 மீட்டர் ஓடுபாதை தேவை. புதுவையில் விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்த நிலம் கையகப்படுத்தும் செயல்முறை அவசர தேவையாக உள்ளது. காரைக்கால் சனீஸ்வர பகவானை வழிபட பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
காரைக்காலில் விமான நிலைய வசதி இல்லை. காரைக்காலில் ஹெலிபேட், விமான நிலைய கட்டமைப்பு காலத்தின் தேவை. மத்திய மந்திரி இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
காரைக்கால்- புதுவை இடையே மத்திய அரசு நிதியுதவியுடன் படகு சேவை வழங்க வேண்டும். புதுவை, காரைக்கால் துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தாராளமாக மத்திய அரசு உதவ வேண்டும். புதுவை- கடலலூர் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதிலிருந்து பொது மக்களை விடுவிக்க மரப்பாலம் சந்திப்பு முதல் முள்ளோடை வரை மேம் படுத்தப்பட்ட சாலை அமைப்பது அவசர தேவை மத்திய உதவியால் மட்டுமே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களுக்கு இடையிலான ரெயில் இணைப்பு போதியதாகவும், தரமற்றதாகவும் உள்ளது. தரங்கம்பாடி, சீர்காழி வழியாக காரைக்கால், கடலூர் வரை இணைக்கும் ரெயில்பாதை விரிவாக்கம், புதுவை, காரைக்கால் இணைப்பை எளிதாக்கும். அதிக எண்ணிக்கையிலான ரெயில் இணைப்புகளுடன் மாகி பிராந்தியத்தில்
ரெயில்வே அமைப்பை மேம் படுத்த வேண்டும்.
சென்னை,- மகாபலிபுரம், புதுவைக்கு சாலை போக்குவரத்து மட்டுமே உள்ளது. புதுவையின் வருங்கால வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் சென்னை-- புதுவை வர்த்தக வழித்தடத்தில் ரெயில் இணைப்பை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். மத்திய மந்திரி முன்னுரிமை அடிப்படையில் இவ் விஷயத்தை பரிசீலிக்க வேண்டும். ரெயில் இணைப்பு காக்கிநாடாவில் இருந்து ஏனாம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய மந்திரி புதுவை மாநில தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றவும், உதவிகளை வழங்கவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story