search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணலூர்பேட்டை ஆற்று திருவிழா குறித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை
    X
    மணலூர்பேட்டை ஆற்று திருவிழா குறித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை

    மணலூர்பேட்டை ஆற்று திருவிழா குறித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை

    திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமரன் தலைமையில் மணலூர்பேட்டை முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ந் தேதி ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவில் மற்றும் இதர சமய திருவிழாக்கள் நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் மணலூர்பேட்டையில் 18-ந் தேதி நடைபெற இருந்த ஆற்றுத் திருவிழா நடைபெறாது என உறுதியானது.

    அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமரன் தலைமையில் மணலூர்பேட்டை முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், திருக்கோவிலூர் நிலைய தீயணைப்பு அலுவலர் இளங்கோவன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர்கள், திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் செயல் அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு தரப்பினரும், அதிமுக நகர செயலாளர் ரமேஷ், பாமக நகர செயலாளர் கோவிந்தராஜ், திமுக நகர செயலாளர் வக்கீல் ஜெய்கணேஷ், திமுக வக்கீல்கள் சையத் அலி, பாலாஜிபூபதி, நிர்வாகிகள் அண்ணாதுரை, சரவணன் சுப்பிரமணி, மண்ணு, மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும், ஊர் முக்கிய பிரமுகர்களும் கோவில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய தாசில்தார் குமரன் தமிழக அரசின் உத்தரவுப்படி ஆற்றுத்திருவிழா நடைபெறுவதை அனுமதிக்க முடியாது என கூறினார்.

    அப்போது மணலூர்பேட்டை நகர பொதுமக்கள் சார்பில் தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் ஜெய்கணேஷ் பேசியதாவது:-

    கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக முதல்வர் அறிவித்துள்ள தடை உத்தரவை நாங்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம் திருவண்ணாமலையிலிருந்து பாரம்பரியமாக ஆண்டுதோறும் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றுக்கு வருகைதந்து ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு செல்லும் வகையில் அருணாச்சலேஸ்வரர் சாமி வருவதை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    அருணாச்சலேஸ்வரர் வரும்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று விதிகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் சாமிக்கு படையல் செய்வதையோ, தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையோ தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணி வழங்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மணலூர்பேட்டையில் ஆண்டாண்டு காலமாக வருவதை நிறுத்தாமல் வருகை புரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கருத்தை கேட்டறிந்த தாசில்தார் குமரன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து முடிவு அறிவிக்கப்படும் என அறிவித்தார்.
    Next Story
    ×