search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திண்டுக்கல் மாவட்டத்தில் மெகா முகாம்கள் மூலம் 13½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர்

    திண்டுக்கல் மாவட்டத்தில் மெகா முகாம்கள் மூலம் 13½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    மாவட்ட கலெக்டர் விசாகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடையும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி 1,225 இடங்களில் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் மட்டும் 72 ஆயிரத்து 459 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 10 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் 13 லட்சத்து 46 ஆயிரத்து 182 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் 6 லட்சத்து 89 ஆயிரத்து 52 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் 77.8 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் 11-வது முறையாக மாவட்டம் முழுவதும் 740 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டு 2-ம் தவணை செலுத்துவதற்காக காத்திருப்பவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் 84 நாட்கள் நிறைவடைந்த பின்னரும், கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் 28 நாட்கள் நிறைவடைந்த பின்னரும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×