search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டயர் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்த காட்சி
    X
    டயர் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்த காட்சி

    சூலூர் அருகே டயர்கள் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீவிபத்து - மழை பெய்ததால் பெரும் சேதம் தவிர்ப்பு

    சூலூர் அருகே விபத்து நடந்த நேரம் மழை கொட்டியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் லாரியில் இருந்த அனைத்து டயர்களும், லாரியும் எரிந்து சேதம் ஆகி இருக்கும்.

    சூலூர்:

    கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு நேற்று சுமார் 150 டயர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    சூலூர் அருகே எல்என்டி புறவழிச்சாலையில் அந்த லாரி இரவு சுமார் 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. லாரியை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கண்சாம்நாத் ஓட்டி வந்தார். இந்நிலையில் சிந்தாமணிப்புதூர் அருகே சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபோது திடீரென லாரி தீப்பற்றிக் கொண்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். லாரி தீ பற்றிய செய்தியை அறிந்த சூலூர் தீயணைப்பு படையினர் தீயணைப்பு அலுவலர் கோபால் தலைமையில் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அதற்குள்ளாக லாரியின் முன்பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

    தீயணைப்பு படையினர் லாரியின் பின் கதவை உடைத்து திறந்து அதில் இருந்த டயர்களை கீழே இறக்கினர். பின்னர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் சுமார் இருபது டயர்கள் தீயினால் சேதமடைந்தன. தீயணைப்பு படையினரின் முயற்சியால் மற்ற டயர்கள் சேதமின்றி தப்பின. லாரியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    விபத்து நடந்த நேரம் மழை கொட்டியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் லாரியில் இருந்த அனைத்து டயர்களும், லாரியும் எரிந்து சேதம் ஆகி இருக்கும்.

    Next Story
    ×