என் மலர்

  செய்திகள்

  போலீசார் விசாரணை
  X
  போலீசார் விசாரணை

  ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை- தலைமை ஆசிரியையிடம் போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவி தற்கொலை வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
  கோவை:

  கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் இந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் மாணவி கூறி உள்ளார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர்.

  இந்தநிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

  போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (வயது 31) உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

  கைது

  பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று மாலை கைது  செய்தனர். 

  அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இரவு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியரை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர். 

  தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

  அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்  வாங்க மறுத்து விட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

  எங்களது மகளுக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து நாங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரும் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக உள்ளார். அவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

  இதனையடுத்து மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் மாணவியின் தற்கொலைக்கும் காரணம் உள்ளதா? அவர்கள் மாணவிக்கு ஏதாவது தொல்லை கொடுத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  Next Story
  ×