search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழ்நாடு முழுவதும் நீர் தேக்கங்களில் 200 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு

    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர் தேக்கங்களில் நான்கில் ஒரு பங்கு நிரம்பியுள்ளதால், 200 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
    வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த 1-ந்தேதியில் இருந்து மாநிலத்தில் சுமார் 38.4 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த பருவ காலத்தில் பெய்யும் மழையை விட 50 சதவீதம் அதிகமாகும். பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

    தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் நான்கில் ஒரு பங்கு நிரம்பின. மாநிலத்தில் 14 ஆயிரத்து 138 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. இதில் 3,691 ஏரிகள் நிரம்பி உள்ளன.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் நீர் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு 200 டி.எம்.சி.யை நெருங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 199.65 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது 90 நீர் தேக்கங்களின் கொள்ளளவில் 89 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு நவம்பர் 10-ந்தேதி 140 டி.எம்.சி.யாக இருந்தது. இது மொத்த கொள்ளளவில் 63 சதவீதம் ஆகும். மாநிலத்தில் உள்ள நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.294 டி.எம்.சி. ஆகும். தற்போதுள்ள சேமிப்பில் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி ஆகிய அணைகளில் மூன்றில் இரண்டு பங்கு 126.87 டி.எம்.சி. ஆகும்.

    மேட்டூரில் 91.883 டி.எம்.சி, பவானிசாகரில் 31.131 டி.எம்.சி, அமராவதியில் 3.8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த 3 நீர் தேக்கங்களும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.

    பரம்பிக்குளம் குழும நீர் தேக்கங்களை பொறுத்த வரை 4 பெரிய நீர் தேக்கங்களான பரம்பிக்குளம், ஆழியார், சோலையார், திருமூர்த்தி மிகவும் அதிக சேமிப்புகளை கொண்டுள்ளன. 87 சதவீத கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையை தவிர மற்ற 3 அணைகளும் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன. முல்லை பெரியாரில் 5.639 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருக்கிறது.

    கன்னியாகுமரியின் 2 முக்கிய நீர் தேக்கங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சானியில் சுமார் 85 சதவீத நீர் இருப்பு உள்ளது.

    சாத்தனூர் நீர் தேக்கத்தின் சேமிப்பு 3.392 டி.எம்.சி.யாக உள்ளது. இது அதன் கொள்ளளவில் 40 சதவீதம் ஆகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் அதன் கொள்ளளவில் 61 சதவீதம் (0.892) டி.எம்.சி. நீரை கொண்டுள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் அவற்றின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றின் ஒருங்கிணைந்த சேமிப்பு 73 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை மாறுபடுகிறது.
    Next Story
    ×