search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைநீர் வெளியேற்றப்படும் காட்சி
    X
    மழைநீர் வெளியேற்றப்படும் காட்சி

    சென்னையில் மழைநீர் தேங்கியதாக 11,337 புகார்கள்: 5,932 இடங்களில் மழைநீர் உடனடியாக வெளியேற்றம்

    சென்னையில் மழைநீர் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதற்கு 11,337 புகார்கள் வந்துள்ளன.
    சென்னையில் மழைநீர் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வெப்சைட், நம்ம சென்னை செயலி, 1913 உதவி எண், வாட்ஸ்-அப் எண், டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் மழை நீர் தேங்குவது குறித்த புகார்கள் பெறப்படுகிறது.

    24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவையால் பொது மக்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு அளிக்கப்படுகிறது.

    கடந்த 6-ந்தேதி முதல் இன்று காலை 9 மணி வரை (6 நாட்கள்) சென்னையில் மழைநீர் தேங்கியதாக 11,337 புகார்கள் வந்துள்ளன. இதில் 5,932 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அந்தந்த பகுதிகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. 5,405 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கியதாகவே பெரும்பாலான புகார்கள் வந்துள்ளன.

    மரம் முறிந்து விழுவது குறித்த புகாருக்கு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரையில் 174 மரங்கள் விழுந்துள்ளன. இதில் 96 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 78 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மரம் விழக்கூடிய நிலையில் உள்ளது என்ற புகாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை மக்களிடம் இருந்து வெள்ள பாதிப்புகள் குறித்த புகார்களை கேட்டறிய 24 மணிநேரமும் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் தகவல் சேகரிப்பு பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கட்டணமில்லா அழைப்பு எண் 1913 புகார் மையத்தில் 100 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். வெப்சைட்டில் 10 பேரும், மற்ற தகவல் சேகரிப்பு பணிகளில் 90 பேரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×