search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும்போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
    சென்னை:

    பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மனிதர்களை கொண்டு கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும்விதமாக மனுதாரர் தரப்பில் பல ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஆலோசனைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை' என்று கூறப்பட்டு இருந்தது.

    அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கழிவுகளை அகற்றும் பணியில் இதுநாள்வரை ஈடுபட்டவர்களுக்கு, மாற்று வேலை உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும்போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

    கழிவுகளை மனிதர்கள் அகற்றும் இந்த நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும், மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கான வழிவகைகளையும் அரசு உருவாக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்கிறோம்.

    இவ்வாறு கூறியுள்ளனர்.

    Next Story
    ×