search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கேயத்தில் மழையால் மூடி வைக்கப்பட்டுள்ள கொப்பரை குவியல்கள்.
    X
    காங்கேயத்தில் மழையால் மூடி வைக்கப்பட்டுள்ள கொப்பரை குவியல்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் மழையால் முடங்கிய தொழில்கள் - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

    ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 25 தடுக்கு கொண்ட கட்டு 200 ரூபாய் வரை விற்பனையானது.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியை ஆதாரமாகக்கொண்டு நார் உற்பத்தி, தென்னந்தடுக்கு பின்னுதல், சீமாறு உற்பத்தி என பல்வேறு உபதொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதில் ஜல்லிபட்டி, தினைக்குளம் பகுதியில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக தென்னந்தடுக்கு உற்பத்தி செய்யும் தொழில் உள்ளது. சுற்றுப்பகுதியிலுள்ள தோப்புகளில் மட்டைகளை வாங்கி தண்ணீரில் ஊற வைத்து தடுக்கு பின்னுகின்றனர். வெயில் காலத்தில் பந்தல் அமைத்தல், குடிசை மேற்கூரை என பல்வேறு இடங்களில் இவ்வகை தென்னந்தடுக்குகள் பயன்பட்டு வருகின்றன. 

    இங்கு உற்பத்தியாகும் தடுக்குகள், பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு தனி நபர் ஒருவர் 100 தடுக்கு வீதம் 2,000 ஆயிரம் தடுக்குகள் வரை பின்னுகின்றனர். 

    பின்னர் அவற்றை 25 தடுக்குகள் கொண்ட கட்டுகளாக கட்டி, விற்பனைக்கு அனுப்புகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் பிற மாவட்டங்களுக்கு தடுக்கு விற்பனைக்கு அனுப்பப்படவில்லை.

    ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 25 தடுக்கு கொண்ட கட்டு 200 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் உற்பத்தியை தீவிரப்படுத்த கூடுதலாக தென்னை மட்டைகளை வாங்கி இருப்பு வைத்து பணிகளை மேற்கொண்டனர். 

    ஆனால் தொடர் மழை காரணமாக பிற மாவட்டங்களுக்கு, தடுக்கு அனுப்புவது தடைபட்டுள்ளது. எனவே தொழிலாளர்கள் பின்னி வைத்துள்ள ஆயிரக்கணக்கான தடுக்கு விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.

    இப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் உற்பத்தியும் முடங்கியுள்ளது. இதனால்  வாழ்வாதாரத்தை இழந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

    ஜல்லிபட்டி பகுதியில் தென்னந்தடுக்கு பின்னும் தொழில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கி வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் பாதிப்பு காரணமாக தொழில் தள்ளாடி வருகிறது. எனவே தமிழக அரசு நல வாரியம் வாயிலாக எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

    மேலும் தடுக்கு பின்னுவதற்கு நிரந்தர நிழற்கூரை மற்றும் இருப்பு வைக்க குடோன் கட்டிக்கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் உடுமலை, தளி, அமராவதி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் விளைச்சலை அளிக்காமல் விவசாயிகளை கைவிட்டாலும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைவளர்ப்பு நிரந்தர வருமானத்தை அளித்து வருகிறது. 

    ஆட்டின் புழுக்கை, கோழி எச்சம், மாட்டுச்சாணம் போன்றவை இயற்கை உரமாக விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அது தவிர பால், நெய், தயிர், கோமியம் உள்ளிட்டவை நாள்தோறும் கால்நடை வளர்ப்போருக்கு நிரந்தர வருமானத்தை அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி நிலமற்ற தொழிலாளர்களும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறுகையில், கால்நடை வளர்ப்பு நிறைவான நிரந்தரமான வருமானத்தை அளித்து வருகிறது. விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு எளிதில் உணவு கிடைத்து விடுகிறது. ஆனால் பொதுமக்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நீரோடைகள் ,குளம் குட்டைகள் மற்றும் சாலையின் ஓரங்களில் வளர்ந்து உள்ள செடிகள் புற்கள் மட்டுமே உணவாகும். இந்த சூழலில் உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 

    இதன் காரணமாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாமல் வீட்டிலேயே கட்டிவைத்து தீவனம் போடும் சூழல் நிலவுகிறது. 

    இதேநிலை நீடித்தால் கையிருப்பில் உள்ள தீவனம் முடிவடைந்து தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் பால் உற்பத்தி குறைந்து வருவதுடன் மாடுகளை நம்பிப் பிழைப்பு நடத்தும் கால்நடை வளர்ப்போருக்கு அன்றாட வருமானம் கேள்விக்குறியாகி வருகிறது. 

    எனவே மானிய விலையில் தீவனப்பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் களங்கள் உள்ளன. இந்த உலர் களங்களில் தேங்காய் உடைக்கப்பட்டு கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. காங்கேயம் சுற்றுப்பகுதியில் கடந்த 15 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பகல் நேரத்தில் மழை பொழிவு குறைந்து வெயில் அடித்ததால், கொப்பரை உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்வதாலும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாலும் கொப்பரை உற்பத்தி முழுமையாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கொப்பரை உற்பத்தியாளர் தரப்பில் கூறியதாவது:-

    காங்கேயம் தாலுகாவில் உள்ள உலர்களங்களுக்கு தினமும் சுமார் 500 லோடு தேங்காய் கொண்டு வரப்பட்டு கொப்பரை உற்பத்தி செய்யப்பட்டது.

    தற்போது பருவமழை தொடர்ந்து பெய்வதால், கொப்பரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்ட தேங்காய் பருப்பை உலர வைப்பதற்காக உலர்களத்தில் குவித்து தார்பாலின் கொண்டு மூடி வைத்துள்ளோம். 

    இதனால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உள்ளூர் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மழை நின்றால் தான் தொழில் சீரடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×