search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி விடுமுறைக்கு பின் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் இன்று ஆடை உற்பத்தி தொடங்கியதை படத்தில் காணலாம்
    X
    தீபாவளி விடுமுறைக்கு பின் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் இன்று ஆடை உற்பத்தி தொடங்கியதை படத்தில் காணலாம்

    தொழிலாளர்கள் பலர் பணிக்கு திரும்பாததால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிப்பு

    கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகளால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள்  உள்ளன. இங்கு  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு  10 முதல் 15 நாட்கள் வரை விடுப்பு எடுப்பதை பனியன் தொழிலாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்காக திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு கடந்த 3-ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து 2-ந்தேதி இரவு முதல் தமிழகத்தை சேர்ந்த  தொழிலாளர்கள் கொட்டும் மழையிலும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர். சுமார்   2 லட்சம் தொழிலாளர்கள் வரை சென்றனர். தொழிலாளர்கள் வசதிக்காக  திருப்பூரில் இருந்து நெல்லை,புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை ,சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
      
    இந்தநிலையில் கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகளால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து  திருப்பூர் பனியன்  நிறுவனங்களுக்கு அதிக அளவில்   பனியன் உற்பத்தி ஆர்டர்கள் வந்துள்ளது.

    எனவே அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டியது உள்ளதால் தீபாவளிக்கு செல்லும் தொழிலாளர்கள் இன்று 8-ந்தேதி (திங்கட்கிழமை) பணிக்கு திரும்புமாறு  உற்பத்தியாளர்கள்  சார்பில்  வேண்டுகோள் விடுக்கப்பட்டு  இருந்தது.

    பண்டிகை முடிந்ததையடுத்து திருப்பூரில் ஆடை உற்பத்தி, நிட்டிங், டையிங் உட்பட அனைத்து வகை ‘ஜாப் ஒர்க்‘ நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் இயக்கத்தை தொடங்கி உள்ளன. ஆனால் இன்று குறைந்த அளவிலான தொழிலாளர்களே பணிக்கு திரும்பினர். பெரும்பாலான தொழிலாளர்கள் வரவில்லை.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  மழை பெய்து  வருகிறது. இதனால் ஏற்பட்ட சிரமம் காரணமாக தொழிலாளர்கள் பலர் பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

    சொந்த ஊர் சென்ற அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வந்தால் மட்டுமே வெளிநாட்டு ஆர்டர்களை விரைவில் முடித்து கொடுக்க முடியும். தற்போது தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால் ஆடை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஆடை தயாரிப்புக்கு  வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள்  வருகை அதிகரித்துள்ளது. நூல் உட்பட மூலப்பொருட்கள் மற்றும் அனைத்து ஜாப் ஒர்க் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.

    இதனால் ஆடை உற்பத்தி செலவினமும் அதிகரித்துள்ளது.ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர் மீதான ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்வதும், புதிய ஆர்டர்களை பெறுவதும், பின்னலாடை துறையினருக்கு சவால் நிறைந்ததாக உள்ளது.

    தொழிலாளர்கள், கடந்த ஆண்டுகள் போன்று  பண்டிகை விடுமுறையை நீட்டித்தால் ஆடை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் தொடரும்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டால்  பின்னலாடை துறை பெரும் சரிவை சந்திக்க நேரிடும்.

    உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டால் அதிக தொகை செலவழித்து பின்னலாடைகளை விமானங்களில் வெளிநாட்டு வர்த்தகருக்கு அனுப்பும் நிலைக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் தள்ளப்படும். எனவே தொழிலாளர்கள் அனைவரும்  உடனடியாக பணிக்கு திரும்பி விடவேண்டும் என்றனர்.
    Next Story
    ×