என் மலர்

  செய்திகள்

  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
  X
  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணை அடுத்தவாரம் வெளியாகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன.
  சென்னை:

  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தப்பட்டது.

  அப்போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலவில்லை. அதனைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சி அமைந்தது. நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 13 ஆயிரத்து 542 பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

  இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தயாரானது. இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

  இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

  38 மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல அளவில் 7 கட்டமாக தேர்தல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்களும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், இந்த கூட்டங்களில் பங்கேற்றனர்.

  தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்த மாநில தேர்தல் அதிகாரி பழனிக்குமார் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. தேர்தல் பணியில் தொண்டர்கள் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது தொண்டர்களை களப்பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

  அதேபோல ஆளுங்கட்சியான தி.மு.க.வும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை போல நகர்ப்புற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

  இதற்கிடையில் வரைவு வாக்காளர் பட்டியலும் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள கட்சித் தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

  அதன் அடிப்படையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அடிப்படையான தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

  சுப்ரீம் கோர்ட்


  ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேர்தலை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு முறையில் வாக்களிக்க அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

  சட்டமன்ற தேர்தலின் போது பயன்பாட்டில் இருந்த வாக்குச்சாவடிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  பாதுகாப்பற்ற வாக்குச்சாவடிகளை மாற்றி வேறு இடங்களில் அமைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  தேர்தல் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தவும், அதற்கான பயிற்சி அளிக்கவும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை ஒதுக்கி உள்ளது.

  உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் சரிசமமான அளவில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள். தங்கள் வார்டு (ஆண்/பெண் /பொதுவானவர்/ தாழ்த்தப்பட்டவர்) எந்த பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

  அதற்கு ஏற்றவாறு தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்கவும் இப்போதே தயாராகி வருகிறார்கள். தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

  தற்போது மழைக்காலமாக இருப்பதால் ஜனவரியில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவலும் வெளிவருகிறது. ஆனால் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. அதற்கான அனைத்து இறுதிகட்ட பணிகளும் மாவட்ட அளவில் நிறைவு பெற்றுள்ளன.

  அதனால் டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாநில தேர்தல் ஆணைய வட்டாரம் தரப்பில் கூறும்போது, ‘‘அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அடுத்த வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது’’ என்றனர்.

  தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கும் கட்சி தொண்டர்கள் அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர்.


  Next Story
  ×