search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் பூங்கா
    X
    வண்டலூர் பூங்கா

    வண்டலூர் பூங்காவில் சிங்கம், 7 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து மரணம்- பறவை காய்ச்சல் காரணமா?

    வண்டலூர் பூங்காவில் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த 22 வயதான பெண் சிங்கம் கவிதா நேற்று முன்தினம் இறந்தது.
    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 35 நெருப்புக்கோழிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    கடந்த திங்கட்கிழமை ஒரு நெருப்புக்கோழி திடீரென இறந்தது. இதைத்தொடர்ந்து மறுநாள் மேலும் ஒரு நெருப்புக்கோழி இறந்தது.

    இதுதொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து நெருப்புக்கோழிகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அடுத்தடுத்து மேலும் 5 நெருப்புக்கோழிகள் பராமரிக்கப்படும் இடத்தில் இறந்து கிடந்தது.

    நன்றாக மேய்ந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு கோழிகள் திடீரென உட்கார்ந்து சாய்ந்து விடுவதாகவும் அதன் வாயில் இருந்து ரத்தம் வந்து இறந்து விடுவதாகவும் நெருப்புக் கோழியை பராமரிக்கும் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து 7 நெருப்பு கோழிகளும் எவ்வாறு இறந்தது? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் நெருப்பு கோழிகளின் உடலை பரிசோதனை செய்து உள்ளனர்.

    பறவைக்காய்ச்சல் காரணமாக நெருப்பு கோழிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இறந்த நெருப்பு கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே அவை எப்படி இறந்தது என்பது தெரியவரும் என்றனர்.

    நெருப்புக்கோழி பராமரிக்கப்படும் இடத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள். மேலும் மற்ற நெருப்பு கோழிகளுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். நெருப்பு கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பரவ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வண்டலூர் பூங்காவில் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த 22 வயதான பெண் சிங்கம் கவிதா நேற்று முன்தினம் இறந்து போனது.

    இந்த சிங்கம் ஏற்கனவே கொரோனோவால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்தது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக இந்த பெண் சிங்கம் இறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வண்டலூர் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இதில் 2 சிங்கங்கள் இறந்துள்ளன. 8 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. அவை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளன.

    இந்த நிலையில் பூங்காவில் மேலும் ஒரு சிங்கமும், 7 நெருப்பு கோழிகளும் அடுத்தடுத்து இறந்துள்ளன.

    கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஆகஸ்டு 25-ந் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×