search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    கொலை நகரமாக மாறி வருகிறது புதுச்சேரி- நாராயணசாமி குற்றச்சாட்டு

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. 6 மாத ஆட்சியில் அமைதி மாநிலம் என்ற நிலை மாறி புதுச்சேரி கொலை நகரமாகி வருகிறது என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
    புதுச்சேரி:

    சமூக வலைதளத்தில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்த 6 மாத காலத்தில் மாநிலத்தின் அமைதி குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, நிலம், வீடு அபகரிப்பு, கடைகளில் பணம் பறித்தல், தொழிற்சாலைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களை மிரட்டி மாமூல் வசூல் போன்றவை தாராளமாக நடந்து வருகிறது.

    கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின்போது சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தோம். தற்போது புதுவை மாநிலத்தில் பணிபுரிகின்ற இதே காவல்துறை அதிகாரிகள் தான் அப்போது மிக சிறப்பாக பணி செய்து சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

    ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறி மாநில மக்கள் அச்சத்திலும், பீதியிலும் வாழ வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வெளியே நடமாட முடியவில்லை. கடைகளுக்குள் புகுந்து ரவுடிகள் மிரட்டி செல்கின்றனர்.

    கடந்த 6 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு காரைக்காலில் ஒருவர் கூலிப் படையால் கொலை செய்யப்பட்டுள்ளார். வாணரப்பேட்டையில் 2 பேர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்ந்து நடந்து வருகிறது. தொழிற்சாலை அதிபர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை. அவர்களை மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. அமைதியான மாநிலம் என்ற நிலை மாறி புதுச்சேரி கொலை நகரமாக மாறி வருகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்க வேண்டும். வாணரப்பேட்டையில் நடைபெற்ற கொலை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்.

    ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது, எவ்வாறு கட்சியின் பலத்தை வளர்த்து கொள்வது என்பதைத்தான் பார்க்கின்றனர். நிர்வாகத்தை பற்றியோ, மாநில மக்களை பற்றியோ கவலையில்லை.

    இப்போதாவது விழித்துக்கொண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை தலைமை அதிகாரியும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    மத்திய மந்திரிகளை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற நடவடிக்கை இல்லை. புதுவை மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பை முதல்-அமைச்சர் கொடுக்க வேண்டும்.

    தற்போது விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. அரிசி, பருப்பு, சமையல் எண்ணை விலைவாசி விஷம் போல் உயர்ந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இந்த விலையை உயர்த்துவதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அதற்கான தண்டனையை மத்திய அரசுக்கு இந்த நாட்டு மக்கள் விரைவில் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×