என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் சிறுத்தைப்புலி நடமாட்டம்?

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் சிறுத்தைப்புலி நடமாடியதாக சமூக வலைத்தளத்தில் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் கூசுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன், சிறுத்தையை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வன ஊழியர்கள் கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர். மேலும் கேமராக்கள் மூலமும் கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி நடமாட்டம் தெரியவில்லை.

    இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் சிறுத்தை படத்துடன் செய்தி ஒன்று பரவியது. அதில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆயுதப்படைக்கு செல்லும் வழியில், தேர்தல் அலுவலக கட்டிடம் அருகில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடி உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அந்த வழியாக செல்ல வேண்டாம். குறிப்பாக இரவு நேரங்களில் அங்கு செல்ல வேண்டாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அந்த சிறுத்தைப்புலி ஆடுகள், நாய்களை வேட்டையாடி உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் என குறிப்பிட்டு, சிறுத்தைப்புலி நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானதாகவும் படம் வெளியாகி இருந்தது. ஏற்கனவே கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் சிறுத்தைப்புலி உள்ளதாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், இந்த சமூக வலைத்தள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனியிடம் கேட்ட போது கூறியதாவது:-

    நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலகம் பின்புறம் சிறுத்தைப்புலி நடமாடியதாக எங்களுக்கு தகவல்வந்தது. நாங்கள் அந்த பகுதியில் சென்று சிறுத்தைப்புலியின் கால்தடங்கள் உள்ளதா? என்று பார்த்தோம். இதில் நாய்கள் அந்த பகுதியில் சென்றதற்கான கால் தடங்களே இருந்தன. யாரும் சிறுத்தைப்புலியை நேரில் பார்த்ததாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடந்த 10 நாட்களாக சிறுத்தையை யாரும் பார்த்ததாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆனாலும் கிருஷ்ணகிரி கூசுமலை, மேலுமலை, சிக்காரிமேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×