search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட்
    X
    கொடநாடு எஸ்டேட்

    கொடநாடு வழக்கு- ஊட்டி கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

    கொடநாடு வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளை வைத்து அதற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டும் பணியில் ஈடுபட்டனர். சில ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ல் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மனோஜை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ள நிலையில் கொடநாடு வழக்கில் மறு விசாரணை கோரப்பட்டது. கோர்ட்டின் அனுமதியின் படி நடந்த மறுவிசாரணையில் முதல் ஆளாக சயான் போலீசில் ஆஜராகி மறு வாக்குமூலம் அளித்தார்.

    இதில் முக்கிய பிரமுகர்கள் சிலரின் பெயரையும் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டது. அவரது மறுவாக்குமூலத்திற்கு பின்பே கொடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவுப்படி ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கடந்த மாதம் 2-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது போலீசார் 4 வார கால அவகாசம் கேட்டது. அதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இதையடுத்து தனிப்படையினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கிய குற்றவாளியான சாலை விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனகராஜ் மனைவி, நண்பர்கள், வழக்கில் தொடர்புடைய சம்சீர் அலி, மனோஜ்சாமி, சந்தோஷ் சாமி, சதீ‌ஷன், பிஜின்குட்டி, எஸ்டேட் மேலாளர் நடராஜன், தற்கொலை செய்து கொண்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேசின் தந்தை, தாய், சகோதரி அரசு சாட்சிகள் என பலரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள் அளித்த தகவல்களை வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரும் ஊட்டியிலேயே முகாமிட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் எஸ்டேட்டில் வேலை பார்த்த நபர்கள், அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரித்தார்.

    இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளை வைத்து அதற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டும் பணியில் ஈடுபட்டனர். சில ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நீதிமன்றம்


    இந்த நிலையில் போலீசாருக்கு கோர்ட்டு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாளை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் போலீசார் தாங்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த அனைத்து தகவல்களையும் அறிக்கையாக தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை நாளை அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அல்லது மேற்கொண்டு விசாரணை நடத்த காலஅவசாகம் கேட்கலாம் எனவும் தெரிகிறது.

    கொடநாடு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.



    Next Story
    ×