என் மலர்
செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
அவினாசி கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்காவிட்டால் மறியல் போராட்டம் - ஊராட்சி தலைவர்கள் அறிவிப்பு
நான்கு ஊராட்சி பகுதியிலும் கடந்த 25 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் சின்னேரிபாளையம், பழங்கரை, குப்பாண்டம்பாளையம், பொங்குபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் லட்சகணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நான்கு ஊராட்சி பகுதிகளில் கடந்த 25 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பழங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது.
இதில் ஊராட்சி தலைவர்கள் சரவணன் - (சின்னேரிபாளையம்),கோமதி - (பழங்கரை), கமலவேணி - (குப்பாண்டம்பாளையம்), சுலோச்சனா வடிவேல் - (பொங்குபாளையம்) ,செந்தில்குமார் - (பழங்கரை முன்னாள் தலைவர்) ஆகிய ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு துணை தலைவர் பிரசாந்த் குமார், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஊராட்சி தலைவர்கள் கூறுகையில்:
நான்கு ஊராட்சி பகுதியிலும் கடந்த 25 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டி பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.
எனவே குடிநீர் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நான்கு ஊராட்சி பொதுமக்கள் ஒன்று திரண்டு மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Next Story