என் மலர்
செய்திகள்

சாலையில் மயில் இரை தேடுவதையும், அதை வாகனம் ஒன்று கடந்து செல்வதையும் படத்தில் காணலாம்.
சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுரை
முதுமலையில் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பதால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர்:
தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்களை இணைக்கும் மையமாக கூடலூர் திகழ்கிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் கூடலூர் வழியாக இயக்கப்படுகிறது. மேலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கி உள்ளன.
இதனால் கூடலூர், முதுமலை வழியாக சரக்கு லாரிகள் மட்டுமின்றி தனியார் வாகனங்கள் சாலைகளில் இயக்கப்படுகிறது. இதேபோல் முதுமலை வனத்திலும் மான்கள், காட்டு யானைகள், உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகமாக காணமுடிகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் தென்படும் வனவிலங்குகளை காணும் ஆர்வத்தில் வாகனங்களை நிறுத்தி ரசிக்கின்றனர். சிலர் செல்போன்களில் புகைப்படம் எடுக்கின்றனர்.
இதனால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சில சமயங்களில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவங்க ளும் நிகழ்கிறது. இந்த நிலையில் முதுமலை சாலையோரம் புள்ளிமான்கள், மயில்கள், சிங்கவால்குரங்கு, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இது போன்ற வனவிலங்குகள் அடிக்கடி சாலைகளை கடந்து செல்கிறது. அது போன்ற நேரங்களில் வாகனங்களை வேகமாக இயக்கினால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே வனப்பகுதியையொட்டி உள்ள சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வனத்துறை உத்தரவை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும். எனவே வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட காரியங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story






