search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த இயற்கை மருந்து - மாவட்ட வனப்பாதுகாவலர் தகவல்

    வனத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை சட்டப்படியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.
    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் துணை கள இயக்குனர் மற்றும் மாவட்ட வன அலுவலராக தேஜஸ்வி பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறியதாவது:

    ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை, வனவிலங்குகள் என சிறப்பு வாய்ந்த வனப்பகுதியாகவும், பல அணைகளுக்கு நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    வனம், வன விலங்குகள் குறித்த விழிப்புணர்வும் இதனை காப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையிலும் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் வனச்சுற்றுலா மேம்படுத்தப்படும்.

    வனத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச்சட்டப்படியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

    வன எல்லையோர கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் பாதித்து வரும் பிரச்சினை இப்பகுதியில் உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நீரில் கரைத்து தெளிக்கும் மருந்து உள்ளது.

    விவசாய நிலங்களின் எல்லைகளில் இதனை ‘ஸ்பிரே’ செய்தால் அதன் மணம் காரணமாக அவை வருவதில்லை. பல பகுதிகளில் இந்த இயற்கை மருந்து பரிசோதனை செய்து பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக கட்டுப்படுத்தலாம். 

    இம்மருந்து தெளிக்கும் போது  வன விலங்குகள் மட்டுமன்றி மயில் போன்ற பறவைகளும் வராது. இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே இதுகுறித்து விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தி விளக்கப்படும்.

    இவ்வாறு மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தெரிவித்தார். அப்போது உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், உடுமலை வனச்சரகர் தனபாலன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×