search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் உயிர் உரங்கள்

    செறிவூட்டிய உயிர் உரம் ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும். உயிர் உரத்தினை, நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலக்க வேண்டும்.
    உடுமலை:

    பயிர்களுக்கு ரசாயன உரங்களின் தேவை அதிகரித்து வருவதால் உரத்தேவையை குறைக்க இயற்கை உயிர் உரம் பரிந்துரை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட மேலாண்மைக்குழு அலுவலர்கள் கூறியதாவது:

    பயிறுவகை பயிர்களுக்கு பயிறு வகை ரைசோபியம், தானியப் பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் இடுவதன் வாயிலாக காற்றிலுள்ள நைட்ரஜன் சத்தை பயிர்களுக்கு கிரகித்துக் கொடுக்கிறது. இதன் வாயிலாக பயிர் வளர்ச்சியை பொருத்து யூரியா உர தழைச்சத்து தேவையைக் குறைத்து கொள்ளலாம்.

    அதே போன்று பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் இடுவதன் வாயிலாக மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தை பயிர்களுக்கு கிடைக்க கூடிய நிலைக்கு மாறுதல் செய்கிறது.
     
    இதன் வாயிலாக பாஸ்பரஸ் உரத்தேவையை குறைக்கலாம். செறிவூட்டிய உயிர் உரம் ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும். உயிர் உரத்தினை, நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலக்க வேண்டும்.

    அதனுடன் சிறிதளவு அரிசிக்கஞ்சி மற்றும் சர்க்கரைப்பாகு சேர்த்து நன்கு கலக்கி தண்ணீர் தெளித்துவர வேண்டும். உயிர் உரங்கள் தொழு உரத்தில் பல்கி பெருகி செறிவூட்டப்படுகிறது. இதனை பயிர்களுக்கு இடுவதன் வாயிலாக நல்ல விளைச்சல் பெறலாம்.

    உயிர் உரங்களுக்கு  தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் பயிறுவகை திட்டத்தின் வாயிலாக  ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவும்  ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவும், எண்ணெய்வித்துப் பயிர்கள் திட்டத்தின் கீழ் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா திரவ உயிர் உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×