என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
    X
    வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6¾ லட்சம் வாக்காளர்கள் - வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி முதல் பிரதியை பெற்று கொண்டார்.

    பின்னர் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான மறு வரையறை செய்யப்பட்ட வார்டுகளின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 1281 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 81 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 266 ஆண்கள், 3 லட்சத்து 50 ஆயிரத்து 387 பெண்கள் மற்றும் 78 இதர வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தினகரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×