search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  நீதிபதி கிருபாகரனுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நினைவு பரிசு வழங்கியபோது எடுத்த படம்
  X
  நீதிபதி கிருபாகரனுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நினைவு பரிசு வழங்கியபோது எடுத்த படம்

  விவாகரத்து கேட்டு வந்த ஆயிரம் தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளேன்- நீதிபதி கிருபாகரன்

  நான் நீதிபதியாக இருந்தாலும், ஒரு சாதாரண மனிதனாகவே வழக்குகளை விசாரித்தேன். என்னுடைய உத்தரவுகள் எல்லை தாண்டியதாக இருப்பதாகவும், நீதித்துறை கட்டப்பஞ்சாயத்து என்றும் சிலர் கூறுவர்.
  சென்னை:

  சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி கிருபாகரன், இன்று ஓய்வு பெறுகிறார். இன்று அரசு விடுமுறை என்பதால், அவருக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வக்கீல் சங்க பிரதிநிதிகள், நீதிபதி கிருபாகரனின் 90 வயது தாயார் ராஜம்மாள், மனைவி எழில்பாவை மற்றும் மகள் பாக்யஸ்ரீ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  சென்னை ஐகோர்ட்

  இந்த நிகழ்ச்சியில், நீதிபதி கிருபாகரனை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் பேசினார். அப்போது அவர், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடும்பிறை கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1959-ம் ஆண்டு கிருபாகரன் பிறந்தவர். இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியும் இவர்தான். பி.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டங்களை பெற்ற பின்னர், சட்டம் படித்து 1984-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல் அபிபுல்லா பாஷாவிடம் ஜூனியராக சேர்ந்தார்.

  2009-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றவர், ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இதனால்தான் இவரை மக்கள் நல நீதிபதி என்று அழைக்கின்றனர்’’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.

  இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:-

  என் தந்தை நடேசகவுண்டர் 4-ம் வகுப்பு வரைதான் படித்தார். ஆனால், எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் வர கடுமையாக உழைத்தார். ஒருநாள் நீ மிகப்பெரிய நபராக வருவாய் என்று என்னை வாழ்த்தினார். அவர் செய்த கல்வி சேவையால், நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

  நான் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்க காரணமாக இருந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுந்தரேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விரைவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்க உள்ள சுந்தரேஷ். எனக்கு மைத்துனர் போன்றவர். எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அவர் தூங்கமாட்டார்.

  மக்களின் கடைசி புகலிடம் இந்த கோர்ட்டுதான். எனவே, வக்கீல்கள் சரியாக இருந்தால்தான், நீதித்துறை சிறப்பாக செயல்படும். இல்லை என்றால், நீதி பரிபாலனத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர். இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களில் பலர் வக்கீல்கள். ஆனால், இப்போது வக்கீல் என்றாலே வீடும், பெண்ணும் கொடுக்க மறுக்கின்றனர். எனவே, ஒவ்வொரு இளம் வக்கீல்களும், வக்கீல் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும்.

  நான் குடும்பநல வழக்குகளை விசாரித்ததன் மூலம், விவாகரத்து கேட்டு வந்த ஆயிரம் தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளேன். இது எனக்கு முழு மனதிருப்தி அளிக்கிறது. ஒற்றை பெற்றோர் கட்டுப்பாட்டின் கீழ் வளரும் குழந்தைகளின் நிலை படுமோசமானது. அந்த குழந்தைகளின் நடவடிக்கையே வித்தியாசமாக இருக்கும். அது மிகவும் பரிதாபத்துக்குரியது.

  125 வயது ஐகோர்ட்டு கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். நான் வழக்குகளை மனசாட்சிப்படி விசாரித்து தீர்ப்பு அளித்தேன். நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வக்கீல் தொழிலை முறைப்படுத்த முடியாதது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது மனநிறைவை அளிக்கவில்லை.

  இருந்தாலும் தமிழக அரசு மக்கள் நலன் கருதி படிப்படியாக மதுக்கடைகளை மூடி, தேசத்தந்தையின் கனவை நனவாக்க வேண்டும். மேலும், நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதால், சுப்ரீம் கோர்ட்டு கிளைகளை நாடு முழுவதும் உருவாக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும்.

  நான் நீதிபதியாக இருந்தாலும், ஒரு சாதாரண மனிதனாகவே வழக்குகளை விசாரித்தேன். என்னுடைய உத்தரவுகள் எல்லை தாண்டியதாக இருப்பதாகவும், நீதித்துறை கட்டப்பஞ்சாயத்து என்றும் சிலர் கூறுவர்.

  ஆனால், சமுதாயம் மற்றும் மக்கள் நலனுக்காகவே நான் உத்தரவுகளை பிறப்பித்தேன். இது என் மனதில் ஊறிப்போனது. இதனால்தான் அடிக்கடி இரவு தூக்கத்தில் கூட நான் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக என் மனைவி கூறுவார்.

  இவ்வாறு அவர் பேசினார்.


  Next Story
  ×