என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராமநாதபுரத்தில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேர் கைது

    கீழக்கரை, ராமநாதபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் ரெயில்வே கேட் அருகே அவர்கள் சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக காருடன் 6 பேர் நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காரை சோதனையிட்டனர்.

    இந்த சோதனையில் காருக்குள் கை உறை, முகம் தெரியாத அளவிற்கு உள்ள தொப்பி, கத்தி, அரிவாள், ஸ்பானர், இரும்பு கம்பி ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனால் 6 பேரும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட முயன்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அதன் அடிப்படையில் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் 6 பேரும் கீழக்கரை, ராமநாதபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்திருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்களது பெயர் கீழக்கரை பருத்திக்கார தெருவைச் சேர்ந்த செய்யது முகம்மது பக்கீர் (வயது 47), வேலூரைச் சேர்ந்த ரஹீம் (32), பார்த்திபன் (43), கார்த்திக் (41), இப்ராகிம் (44). ராபர்ட் ஜான் கென்னடி (30) என தெரிய வந்தது.

    மேலும் கைதான செய்யது முகம்மது பக்கீர் கீழக்கரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது பணம் கையாடல் செய்துள்ளார். அதன் பிறகு ஊரை விட்டு வெளியேறி வேலூர் சென்று டீக்கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது தான் மற்ற 5 பேருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பணம் சம்பாதிக்கும் ஆசையில் தவறான வழியை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அப்போது செய்யது முகம்மது பக்கீர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.

    இதனால் ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளில் வீடுகள் பூட்டப்பட்டே இருக்கும். அங்கு சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டால் அதிக பணம், நகைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளான். அதன்பேரில் தான் 6 பேரும் ஆயுதங்களுடன் காரில் வந்து கொள்ளையடிக்க வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். அவர்கள் கைவரிசையை காட்டும் முன்பு போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×