search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறை படத்தில் காணலாம்.
    X
    கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறை படத்தில் காணலாம்.

    கீழடியில் மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிப்பு

    சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
    சிவகங்கை:

    தமிழ் ஆட்சிமொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையின் கீழ் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன் வழிகாட்டுதலில், மாநில தொல்லியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் கே.ராஜன் மற்றும் கீழடி அகழாய்வு இயக்குனர் ஆர்.சிவானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம் கொடுமலை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய 7 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

    சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பண்டைய மக்கள் விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஓடுகளால் செய்யப்பட்ட அணிகலன்கள், மண் பாத்திரங்கள், நெசவாளர் கருவிகள், கையால் தயாரிக்கப்பட்ட ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை தொல்லியல் துறை வெளிக்கொணர்ந்து வருகிறது.

    கீழடி 7-ம் கட்ட அகழாய்வில் சில தினங்களுக்கு முன்பு 3 அடுக்குகளை கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. உறை கிணற்றின் வெளிப்புறத்தில் கயிறு வடிவில் 2 டிசைன்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மேலும் ஒரு உறை கிணறு கீழடியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறை கிணற்றிலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிழக்கில் இருந்து மேற்காக 58 செ.மீ. நீளமும், அதன் பெரும்பான்மையான பகுதி தெற்கு பகுதியின் உள்ளே செல்லும் வகையிலும் இருக்கிறது.

    தெற்கு பகுதியில் செங்குத்தாக இது 18 செ.மீ. நீளமும் உள்ளது. அலங்காரம் செய்யப்பட்ட விளிம்பின் தடிமன் 3 செ.மீ. ஆகும். அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியின் தென்கிழக்கு மூலையில் இந்த உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழியின் பிற பகுதிகளில் மண்ணில் செய்யப்பட்ட பொருட்களோ, கலைப்பொருட்களோ எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நதியின் வண்டல் மண் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×