search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாகிருஷ்ணன்
    X
    ராதாகிருஷ்ணன்

    மாவட்ட கலெக்டர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்- சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் அறிவுரை

    தளர்வுகளினால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட கலெக்டர்கள் கூடுதல் கவனத்துடன் தொற்று பரவல் தடுப்பு பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் 5-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் தற்போது பொதுப் போக்குவரத்திற்கும் அனுமதி அளித்திருப்பதால் தொற்று எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

    இந்த நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாவட்டங்களில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் விளைவு தெரிய சில நாட்கள் ஆகும். எனவே அனைத்து கலெக்டர்களும் கொரோனா பரவல் தடுப்புப் பணியில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடங்களில் மக்கள் கும்பலாக கூடுவதை கண்காணிக்க வேண்டும்.

    சில மாவட்டங்களில் முந்தைய நாட்களைவிட தொற்று பரவல் அதிகமாக உள்ளது. நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றுவது தொடர்பாக பஸ் நிலையங்கள், சந்தைகள், மத வழிபாட்டு தலங்கள், திருமணம் போன்ற விழா நடக்கும் அரங்கங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.

    கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் லேசாக தொற்று அதிகரித்தோ அல்லது குறையாமல் அப்படியே உள்ளன. இது எதனால் என்பதையும், ஏன் குறையவில்லை என்பதையும் அந்த கலெக்டர்கள் உடனடியாக ஆய்வு செய்து கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    குறைந்தது 100 பேராவது வருகை தரும் வகையில் காய்ச்சல் முகாம்களை வைக்க வேண்டும்.

    ஒட்டுமொத்தமாக தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், ஏதாவது உள்ளூர் பகுதியில் தொற்று அதிகம் இருந்தால் அதை கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது.
    Next Story
    ×