என் மலர்
செய்திகள்

சிங்கம்புணரி எஸ்.புதூர் பகுதியில் பலத்த மழை மின்கம்பம் தென்னை மரம் சாய்ந்தன
சிங்கம்புணரி எஸ்.புதூர் பகுதியில் பலத்த மழை - மின்கம்பம் தென்னை மரம் சாய்ந்தன
சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மின்கம்பம், தென்னை மரம் சாய்ந்தன.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி பகுதியில் நேற்று மாலை வானம் கருமேகக்கூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சிங்கம்புணரியை ஒட்டியுள்ள பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, காளாப்பூர், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தாழ்வான இடங்களில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் தென்னை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சிங்கம்புணரி மாதவன் நகரில் தென்னை மரம் சாய்ந்து அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. நல்லவேளை வீட்டின் மீது மரம் விழாததால் அங்கு வசித்து வருபவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிங்கம்புணரி யூனியன் பஸ் நிறுத்தம் அருகே தென்னை மரம் விழுந்ததில் மின்கம்பமும் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மழை நின்ற பிறகு மின்வாரியத்துறையினர் சாய்ந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, பிரான்பட்டி, குன்னத்தூர், தர்மபட்டி ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகலில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், இரவில் பெய்த மழையால் அப்பகுதி குளிர்ந்து காணப்பட்டது.
Next Story






