search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அறந்தாங்கி அருகே அரசுப்பள்ளி பூட்டை உடைத்து 35 லேப்-டாப்கள் கொள்ளை

    கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் திருட்டை அரங்கேற்றி உள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வேதியியல் ஆய்வக அறையில் 2019-2020 ஆம் ஆண்டிற்கு மாணவர்களுக்கு வழங்குவதற்கான லேப்-டாப்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே நடப்பு கல்வியாண்டுக்காக மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணிக்காக பள்ளி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    அதன்படி நேற்று பள்ளியின் தலைமையாசிரியர் மலைச்சாமி பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் லேப்-டாப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேதியியல் ஆய்வக அறையின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தமிழக அரசின் 35 லேப்டாப்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் இச்சம்பவம் குறித்து நாகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து லேப் டாப்புகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த ட்ரில்லிங் மெஷின், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட ரூ.17 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் இந்த திருட்டை அரங்கேற்றி உள்ளனர்.
    Next Story
    ×