search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    கொரோனா 3-வது அலையை தடுக்க தடுப்பூசியால் மட்டுமே முடியும்: சுகாதாரத்துறை செயலர் அருண்

    தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளதால் தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை செயலர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா ஒரு நாள் பாதிப்பு 2 ஆயிரமாக இருந்தது.

    தற்போது கொரோனா ஒரு நாள் பாதிப்பு 500-க்கும் கீழ் வந்துள்ளது. இது நல்ல வி‌ஷயம் தான். ஆனால், முற்றிலும் கொரோனா நம்மை விட்டு போகவில்லை.

    ஆகவே, முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் முக்கியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டும் தான் கொரோனா 3-வது அலையை நம்மால் தடுக்க முடியும்.

    சமீபத்தில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் 97 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் தான் வெண்டிலேட்டர் மற்றும் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டவர்கள். ஆகவே, தடுப்பூசியால் மட்டும்தான் கொரோனா பாதிப்பை தடுக்க முடியும். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளதால் தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்பட உள்ளது. இது கவர்னருடனான ஆலோசனை கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். 100 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அருண் கூறினார்.

    உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன் கூறும் போது, கொரோனா தடுப்பூசி திருவிழாவை 100 இடங்களில் நடத்த 9 மூத்த பி.சி.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி போடாத நபரை அடையாளம் கண்டு, அவர்களை தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்து வந்து, தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.’’என்றார்.

    துணை கலெக்டர்(தெற்கு) கிரிசங்கர் கூறியதாவது:-

    தடுப்பூசி திருவிழாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கடந்த ஒருவாரத்தில் 10 கிராமங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தியுள்ளோம். இந்த கிராமங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 முதல் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். ஆகவே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பயப்படத் தேவையில்லை.

    சில கிராமங்களில் 80 வயதுடைய சர்க்கரை நோய், இருதயநோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    அவர்களுக்கும் எந்த விதமான ஒவ்வாமையும் இல்லை. தடுப்பூசி போடப்பட்டவர்கள் கொரோனா தீவிரத்தில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர். எனவே அனைவரும் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×