search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபாடம்
    X
    கோப்புபாடம்

    ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கில் சட்டவிரோதமாக மது விற்ற 339 பேர் கைது

    ஈரோடு மாவட்டத்தில், முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்ற 339 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 7 ஆயிரத்து 448 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிற 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் ஏற்கனவே வாங்கி வைத்த மதுபாட்டில்களையும், அண்டை மாநிலமான கர்நாடகா மாநில மதுபாட்டில்களை சட்டவிரோதமாக வாகனங்களில் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தும் வருகின்றனர்.

    இவர்கள் மீது ஈரோடு மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சுப்புரத்தினம் ஆகியோர் தினசரி தீவிர ரோந்து மேற்கொண்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சட்டவிரோதமாக மது விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை மதுவிலக்கு போலீசார் மட்டும் 134 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் 4 ஆயிரத்து 825 உள்பட மொத்தம் 6 ஆயிரத்து 232 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டதில் 205 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,216 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 40 லிட்டர் சாராயம், 530 லிட்டர் சாராய ஊறல், மது விற்பனைக்கும், கடத்தலுக்கும் பயன்படுத்தப்பட்ட 23 இரு சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் பொதுமக்கள் 96558 88100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×