search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருக்காக்குறிச்சி தைலமரக்காட்டில் தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராய ஊறல்களை படத்தில் காணலாம்.
    X
    கருக்காக்குறிச்சி தைலமரக்காட்டில் தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராய ஊறல்களை படத்தில் காணலாம்.

    3,300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் - திருச்சி சரகத்தில் புதுக்கோட்டையில் அதிக வழக்குகள் பதிவு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. நேற்று 3,300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரால் அழிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. நேற்று 3,300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரால் அழிக்கப்பட்டது. திருச்சி சரகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிக சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராய காய்ச்சும் கலாசாரம் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகரித்தது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி பகுதியில் தைலமரக்காட்டில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று விரைந்து சென்றனர். அங்கு 7 பேரல்களில் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தை கண்டறிந்தனர். இதில் மொத்தம் 1,500 லிட்டர் இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயத்திற்கான பொருட்களை கைப்பற்றினர்.

    சாராய ஊறல் போட்டது யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் பொருட்களை ஒப்படைத்து மர்மநபர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவிட்டார். அதன்படி ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று பட்டத்தி காடு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள கடலை கொல்லையில் 300 லிட்டர் சாராய ஊறல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் அதை கறம்பக்குடி வருவாய்த்துறையின் முன்னிலையில் அழித்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் தெற்கு சுண்டாங்கிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவரது தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதாக கீரமங்கலம் போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அய்யப்பன் (39) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அன்னவாசல் அருகே உள்ள கவிநாரிப்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் 1,500 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் 1,500 லிட்டர் சாராய ஊறலையும், விற்பனைக்காக வைத்திருந்த 40 லிட்டர் சாராயத்தையும் கீழே ஊற்றி அழித்தனர். இதுகுறித்து மாவட்ட மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த ஊரடங்கு காலத்தில் கடந்த ஒரு மாதத்தில் திருச்சி சரகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 25 ஆயிரம் லிட்டர் வரை சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறினர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுப்பிரியர்களுக்காக சாராயம் காய்ச்சும் தொழிலை சிலர் கையில் எடுக்க தொடங்கி உள்ளனர். இதனை போலீசார் மோப்பம் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×