என் மலர்
செய்திகள்

காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.
தேன்கனிக்கோட்டையில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகன் மீது தாக்குதல்
தேன்கனிக்கோட்டையில், அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனை தாக்கியதாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த காரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது 65), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் கோவிந்தராஜ் (45). இவர் இருதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை வெங்கட்ராஜூம், அவரது மகன் கோவிந்தராஜூம் அருகில் உள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தில் கடைக்கு மாத்திரைகள் வாங்க சென்றுள்ளனர். அப்போது வெங்கட்ராஜ் வீட்டின் அருகே வசிக்கும் சிவண்ணா, மஞ்சுநாத் ஆகிய இருவரும் நிலத்தகராறு சம்பந்தமாக வெங்கட்ராஜ் மற்றும் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சிவண்ணாவும், மஞ்சுநாத்தும் சேர்ந்து ஆசிரியர் கோவிந்தராஜை தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் அரசு மருத்துமனையில் இருந்தபோது சிவண்ணாவும், மஞ்சுநாத்தும் மருத்துவமனையின் உள்ளே சென்று இரும்பு ராடு கொண்டு கோவிந்தராஜையும் அவரது தந்தை வெங்கட்ராஜையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கோவிந்தராஜூக்கு தலை, மார்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதேபோல வெங்கட்ராஜ்க்கும் காயங்கள் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனை தாக்கிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story






