search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகை சாந்தினி - முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
    X
    நடிகை சாந்தினி - முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

    நடிகை பாலியல் புகாரில் 6 பிரிவில் வழக்கு: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய நடவடிக்கை

    நடிகை சாந்தினி அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் நடிகை சாந்தினி.

    நாடோடிகள் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத் தில் நடித்து இருந்தார். பெசன்ட் நகரில் வசித்து வரும் 36 வயதான இவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக கடந்த 28-ந்தேதி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சாந்தினி பரபரப்பான புகார் ஒன்றை நேரில் அளித்தார்.

    அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 5 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

    கட்டாயப்படுத்தி தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்து இருந்தார்.

    தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வளைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவதுடன் ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

    அமைச்சர் மணிகண்டனின் இந்த நடவடிக்கைகளுக்கு பரணி என்பவரும் உடந்தையாக உள்ளார். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை சாந்தினி கூறி இருந்தார்.

    இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்த கமி‌ஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன்படி மகளிர் போலீசார் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்திய தண்டனை சட்டம் 417, 376, 313, 323, 506(1), தகவல் தொழில்நுட்ப சட்டம் 67ஏ ஆகிய பிரிவுகளில் மணிகண்டன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சாந்தினி அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நடிகை சாந்தினி

    இந்த நிலையில் நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். அப்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றியது தொடர்பாக பரபரப்பான வாக்குமூலமும் அளித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்படும் என்றும் அவரை நேரில் வரவழைத்து விரைவில் விசாரணை நடத்துவோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் 2017-ம் ஆண்டு வேலை செய்து வந்தபோதுதான் பரணி என்பவர் மூலமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாக நடிகை சாந்தினி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து பரணியை நேரில் அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் அளிக்கும் தகவல்களையும் இந்த வழக்கில் போலீசார் முக்கிய ஆதாரங்களாக சேர்க்க உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருக்கிறது. எனவே முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதும் நிச்சயம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

    நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் அ.தி.மு.க. அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தமிழக அரசில் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×