என் மலர்
செய்திகள்

தற்காலிக காய்கறி மார்க்கெட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரில் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
ஊரடங்கு அமலில் உள்ளதால் சுயகட்டுப்பாடுகளுடன் வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு குறித்து நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் சோதனை சாவடி, ஈசான்ய மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறிய வணிக வளாகங்கள், கடைகள் என இதுவரை 1,135 கடைகளுக்கு அபராதமும், 176 கடைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் வருவாய்த்துறை, சுகாதார துறையினருடன் இணைந்து முகக்கவசம் அணியாத 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
உரிய காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்லக்கூடாது. பொதுமக்களே சுயகட்டுப்பாடுகளுடன் வெளியே செல்வதை குறைத்து கொள்ள வேண்டும். இதனால் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட எல்லையில் உள்ள 16 சோதனை சாவடிகள் மட்டும் இல்லாமல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், நகர பகுதிகளிலும் என 76 இடங்களில் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் வாகனங்களில் வருபவர்களிடம் அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் தான் செல்ல அனுமதிக்கின்றனர். தகுந்த காரணங்கள் இல்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை 1,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






