search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கி.ரா. உடல் அரசு மரியாதையுடன் தகனம்
    X
    கி.ரா. உடல் அரசு மரியாதையுடன் தகனம்

    கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. உடல் அரசு மரியாதையுடன் தகனம்

    இடைச்செவலில் உள்ள தோட்டத்தில் அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (வயது98).

    சாகித்ய அகடாமி விருது பெற்ற கி.ரா. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் அவர் காலமானார். அவரது உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் புதுச்சேரி அரசு சார்பில் போலீசாரின் மரியாதை, அரசு தரப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பிரபல எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உடலுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

    தொடர்ந்து நேற்று இரவு கி.ரா.வின் உடலை அவரது மகன்கள் திவாகரன், பிரபி என்ற பிரபாகரன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரியில் இருந்து இடைச்செவல் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. கி.ரா.வின் உடலுக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., எழுத்தாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலையும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் இடைச்செவலில் உள்ள தோட்டத்தில் அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 14 ஆயுதப்படை காவலர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

    அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×