search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓரிரு நாளில் தடுப்பூசி விழா- கவர்னர் தமிழிசை தகவல்

    இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் கொரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பாக இருக்கும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.

    கவர்னர் தமிழிசை கொரோனா நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘‘சி.ஐ.ஐ. கூட்டமைப்பு சார்பில் கொரோனாவுக்கு தேவையான மருந்துகள், கையுறைகள், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இதுபோல் பலரும் கொடுக்க முன்வரும்போது கொரோனாவில் இருந்து மக்களை அதிகளவில் பாதுகாக்க முடியும்.

    தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கையால் சிங்கப்பூரில் இருந்து ராஜேஷ் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தை பார்த்து, இங்கு தொடர்பு கொண்டு ஆக்சிஜன் ப்லோ மீட்டர் அனுப்பியுள்ளார். கதிர்காமம் மருத்துவமனையில் 2-வது மாடியில் புதிதாக 48 ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கி கொண்டு இருக்கிறோம்.

    பொதுமக்களின் பங்களிப்போடு கொரோனாவை எதிர்த்து போராடுவதில் மிக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படுகிறது. 31 பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    ஓரிரு நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி விழா ஆரம்பிக்க இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் கொரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பாக இருக்கும்.

    மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தாமாகவே சுயக்கட்டுப்பாட்டோடு வீட்டில் இருக்க வேண்டும். 12 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்பதால் வெளியே வந்தால் மறுபடியும் கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டி இருக்கும்.

    பெரிய மார்க்கெட் வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக என்னிடம் வந்து மனு அளித்தனர். புதிய இடத்துக்கு எங்களால் கடைகளை மாற்றம் செய்ய முடியாது, அங்கு தேவையான வசதிகள் இல்லை என்று தெரிவித்தனர். நான் கலெக்டரை தொடர்பு கொண்டு அதற்கு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தேன்.

    அவரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதே இடத்திலேயே தனிமனித இடைவெளியுடனும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் கடைகள் இயங்க ஏற்பாடு செய்துள்ளார். ஆதலால் மக்களின் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

    அரசு எல்லாவிதத்திலும் மக்களோடு இருக்கிறது. மக்களும் அரசுடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    புதுவை முதல்- அமைச்சர் கொரோனா தொற்றிலிருந்து உடல்நலம் தேறி வந்துள்ளார். அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்றும், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அமைச்சர்கள் பட்டியல் எதுவும் என்னிடம் வரவில்லை. அது அரசாங்க ரீதியிலான முடிவு. அமைச்சர்கள் பட்டியல் குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
    Next Story
    ×