search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்று பகுதிகளில் பிடிபட்ட இறால், மடவா மீன்கள்.
    X
    ஆற்று பகுதிகளில் பிடிபட்ட இறால், மடவா மீன்கள்.

    வேதாரண்யத்தில் நாட்டு மீன் விற்பனை அமோகம்- உள்நாட்டு மீனவர்கள் மகிழ்ச்சி

    காலையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனையாவதால் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயிருடன் மீன்கள் கிடைப்பதால் மீன்பிரியர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. நாள்தோறும் இப்பகுதியில் இருந்து 5 முதல் 10 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு உள்ளூர் தேவைகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஆறுகாட்டுத்துறையில் 60 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம் பகுதியில் பைபர் படகில் நாள்தோறும் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடல் மீன்கள் பிடிக்க முடியாத சூழ்நிலையில் தற்போது வேதாரண்யம் தாலுகாவில் அவரிக்காடு, கரியாப்பட்டினம், தென்னம்புலம், கள்ளிமேடு, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்கள், குட்டைகள், நீரோடைகள் மற்றும் வளர்ப்பு மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பனாறு, அடப்பாறு, மாணங்கொண்டான் ஆறு உள்ளிட்ட ஆற்று பகுதிகளில் சிறு,சிறு வலைகளை வைத்து மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இவர்களது வலைகளில் மடவாய், சிலேபி, கெளுத்தி, குறவை மீன், விரால், கெண்டை உள்ளிட்ட பல்வேறு மீன்கள் கிடைக்கின்றன. ஆற்று பகுதிகளில் அதிகாலையில் கையால் தடவி ஏராளமானோர் இறால் பிடிக்கின்றனர்.

    கடல் மீன்கள் கிடைக்காத நிலையில் மீன்பிரியர்கள் இப்பகுதியில் கிடைக்கும் நாட்டு மீன்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆற்றில் பிடிக்கப்படும் இறால் கிலோ ரூ.300, மடவா மீன் ரூ.200, சிலேபி ரூ.100, உளூவை ரூ.100, உயிருடன் உள்ள விரால் ரூ.400, இறந்த விரால் ரூ.200, கெண்டை மீன் ரூ.150-க்கும் விலை போகிறது. காலையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனையாவதால் உள்நாட்டு மீனவர்கள் மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயிருடன் மீன்கள் கிடைப்பதால் மீன்பிரியர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
    Next Story
    ×