search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் புற்களை வெட்டி அழகுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் புற்களை வெட்டி அழகுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்

    கொரோனா பரவலால் மூடல்- பூங்காக்களில் தொடரும் பராமரிப்பு பணி

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டாலும், பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த 20-ந் தேதி முதல் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்களின் நுழைவுவாயில்கள் அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் உள்ளே வர அனுமதி இல்லை என்று ஒட்டப்பட்டது. தோட்டக்கலை பூங்காக்கள் மூடப்பட்டாலும், தொடர்ந்து பணியாளர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி பூந்தொட்டிகள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மலர் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. மலர் செடிகளுக்கு களை எடுப்பது, உரமிடுவது, மருந்து தெளிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர். தினமும் காலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களில் இருந்து விழுந்து கிடக்கும் இலைகளை அகற்றி சுத்தம் செய்கிறார்கள்.

    பெரிய புல்வெளி மைதானத்தில் வளர்ந்த புற்களை சமமாக வெட்டி, வெட்டிய புற்களை அப்புறப்படுத்துகின்றனர். பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரும்போது பராமரிப்பு பணி எவ்வாறு நடைபெறுமோ அதேபோல் பூங்கா மூடிய பின்னரும் நடந்து வருகின்றது.

    கொரோனா 2-வது அலை பரவி வருவதால் நடப்பாண்டிலும் கோடை சீசன் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் இயற்கை அழகுடன் கூடிய பூங்காவை பராமரிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவும் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×