என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
தமிழகத்தில் கொரோனா நோயின் 2-வது அலை அதிக வேகமாக பரவி வருகிறது. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு விதமான மருந்துகள் தடுப்பூசியாக போடப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். முதல்டோஸ் போட்டுகொண்டவர்கள் முதலில் எந்த மருந்தை போட்டுகொள்கிறார்களோ அதே மருந்ததைதான் 2-வது டோசில் போட்டுக் கொள்ள வேண்டும்.
தற்போது கோவாக்சின் மருந்து மிகவும் தட்டுப்பாடாக இருந்து வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிமுதல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பொதுமக்கள் வந்து நீண்டநேரம் வரிசையில் காத்திருந்துள்ளனர். காலை 11 மணிக்குமேல் நின்று கொண்டிருந்தவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தீர்ந்துவிட்டது என்று அரசு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






