search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகப்பேறு பிரிவு புதிய கட்டிடத்தில் 80 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு
    X
    மகப்பேறு பிரிவு புதிய கட்டிடத்தில் 80 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு

    நாளை முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் - கலெக்டர் கண்ணன் தகவல்

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாளை முதல் தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்படும் என கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 சதவீத முன் கள பணியாளர்களுக்கும், 61 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் மற்றும் 90 சதவீத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்போது தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்காக 95 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 35 முகாம்கள் நிரந்தர முகாம்களாகும்.

    கலெக்டர் கண்ணன்


    தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கேட்டபோது கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

    தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு குறித்து ஏற்கனவே மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று தடுப்பூசி மருந்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இன்று மதியம் அல்லது நாளை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். மேலும் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெவிசிர் போதிய அளவில் இருப்பு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் மருந்து இல்லாத நிலையில் அவர்கள் இதுபற்றி தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிகளை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 780 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளது. இது போக 7 கொரோனா சிகிச்சை மையங்களும் தயார் நிலையில் உள்ளன. இம்மாவட்டத்தில் தினசரி 1,500 மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை மையத்தில் 2 நவீன பரிசோதனை கருவிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை மையத்தில் செயல் திறனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மையத்தில் தினசரி 2,000 மருத்துவ பரிசோதனை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    தற்போதுள்ள நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அவர்கள் வசிக்கும் பகுதியில் சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தான் நோய் பாதிப்பை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனா நோயாளிகளுக்கு வேண்டிய ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு இல்லை. அரசு ஆஸ்பத்திரியிலேயே ஆக்சிஜனை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பை தவிர்க்க மாவட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன் அரசு அறிவித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×