search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையப்பகுதியை கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையப்பகுதியை கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

    வாணியம்பாடியில் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்லூரியின் தரை தளத்தில் திருப்பத்தூர் தொகுதி, முதல் தளத்தில் ஆம்பூர் தொகுதி, 2-வது தளத்தில் வாணியம்பாடி தொகுதி, 3-வது தளத்தில் ஜோலார்பேட்டை தொகுதி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு, பிரதான கதவுக்கு சீல் ைவத்து, 3 அடுக்கு பாதுகாப்பு போட்டு கண்காணித்து வருகின்றனர்.

    வாக்குப்பெட்டிகள் வைத்துள்ள அந்தந்த தளங்களுக்கு சென்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சிவன்அருள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பொருத்தப்பட்டுள்ள 80 கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணியை பார்வையிட்டார்.

    4 தொகுதி வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்ட அறை, ஊடகத்துறையினருக்கான அறை, அந்த அறைகளில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். பாதுகாப்பு விவரங்களை வேட்பாளர்களின் முகவர்களிடம் கேட்டறிந்தார்.

    அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் என அனைவரும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறைக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வழியை கலெக்டர் பார்வையிட்டார். வாக்கு எண்ணும் மையத்தில் சுழற்சி முறையில் 195 போலீசாரும், 72 மத்திய பாதுகாப்பு படையினரும் பணியில் ஈடுபடும் இடங்கள், பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் கோபுரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், தாசில்தார் பூங்கொடி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×