search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயணைப்பு வீரர்களுக்கு வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    X
    தீயணைப்பு வீரர்களுக்கு வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    வேலூர் தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

    வேலூர் தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    வேலூர்:

    மும்பை விக்டோரியா துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 66 பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை துறைமுகத்தில் கப்பலில் உயிர்நீத்த 66 பேரின் தியாகத்தை போற்றும் வகையிலும், இந்தியா முழுவதும் மீட்பு பணியின்போது உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதனை நினைவு கூறும் விதமாக தீத்தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் இதுவரை மீட்பு பணியின்போது 33 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களிலும், மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூரில் உள்ள மாவட்ட தலைமை தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட அலுவலர்கள் சக்திவேல், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தலைமை தாங்கி, மீட்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன், தீயணைப்பு வீரர்கள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தீயணைப்புத்துறை சார்பில் வருகிற 20-ந் தேதி வரை தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அரசு, தனியார் கல்லூரிகள், பொதுமக்கள் அதிமாக கூடும் இடங்கள், குடிசை அதிகம் நிறைந்த பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டுபிரசுரங்கள் வழங்க உள்ளனர் என்று தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×