search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மாணிக்கம் தாகூர்எம்.பி. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
    X
    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மாணிக்கம் தாகூர்எம்.பி. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    கொரோனா பாதிப்பை தவிர்க்க மாநிலங்களுக்கு, மத்திய அரசு உதவ வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்

    மாவட்டத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
    விருதுநகர்:

    ெகாரோனா பாதிப்பை தவிர்க்க மாநிலங்களுக்கு, மத்திய அரசு உதவிட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த மாவட்டத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 750-வது நபராக நான் தடுப்பூசிபோட்டுக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    இம்மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் பேர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதனை எனது வேண்டுகோளாக கூறுகிறேன்.

    இதன் மூலமே கொரோனா பாதிப்பை தடுக்க முடியும். நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் மாநிலங்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல.

    அவர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாகவும் நடந்துகொள்ளவில்லை. ஒரு டாக்டராகவும் நடந்துகொள்ளவில்லை.

    மத்திய அரசு கொரோனா 2-வது அலையின் தாக்கம் மாநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.

    அப்போதுதான் பாதிப்பினை தவிர்க்க முடியும். அதை விடுத்து மாநில அரசின் மீது பழி போடுவது ஏற்புடையதல்ல. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏழு அம்ச திட்டம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மத்திய மந்திரிகள் பிரதமருக்குத்தானே கடிதம் எழுதியுள்ளார் என்று கருதி நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.

    யார் ஆலோசனை கூறினாலும் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தடுப்பூசி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது உள்ள நிலைமை இப்படி தடுப்பூசி போட்டால் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

    எனவே தடுப்பூசி போடும் வேகத்தினை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய படைகளை கையாளும் விதம் எவ்வாறு என்பதற்கு எடுத்துக்காட்டு மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற சம்பவமாகும்.

    திரிணாமுல்காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தற்போது இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதுபற்றி நாட்டு மக்களுக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×