என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

    சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறும் பொருட்டு நாளை வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டது.
    வேலூர்:

    சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடைபெறும் பொருட்டு நாளை வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் நேற்று முன்தினம் மாலை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களுக்கு தேவையான மது மற்றும் பீர் வகைகளை பலர் வாங்கி சென்றனர். சிலர் டாஸ்மாக் விடுமுறை தினங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக அதிக மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர்.

    தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை குறிப்பிட்ட அளவு மது, பீர் மட்டுமே வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருசிலர் மீண்டும் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி அட்டை பெட்டி, சாக்கு மூட்டைகளில் நிரப்பி கார், மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அதன்காரணமாக பெரும்பாலான கடைகளில் மது, பீர் வகைகள் விரைவில் விற்று தீர்ந்தன. அதையடுத்து கடைகள் மூடப்பட்டன. பெரும்பாலான இடங்களில் இரவு 8.30 மணிக்கே கடைகள் மூடப்பட்டதால் மதுவாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.5 கோடியே 30 லட்சமும், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.3 கோடியே 70 லட்சமும் விற்பனையானது.

    வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 204 டாஸ்மாக் கடைகளில் ரூ.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் பணத்தை கொண்டு செல்லும் மேற்பார்வையாளர்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் மற்றும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    டாஸ்மாக் அதிகாரிகள் 10 காரில் அனைத்து கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் நேரில் சென்று அதுவரை விற்பனையான பணத்தை வாங்கி சீல் வைத்து வேலூர் கோட்ட பொதுமேலாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். அவை இன்று (திங்கட்கிழமை) சம்பந்தப்பட்ட கடையின் பணம் செலுத்தப்படும் வங்கிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வைத்து கடை மேற்பார்வையாளரின் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×